வேதம் என்ற சொல்லின் தாது அல்லது பகுருதி வித் என்பதாகும். வித்-அறிவு, வேதம் என்பதற்கு அறிவு நூல் என்பது போறும். தெய்வீகமான கருத்துக்களைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர் பெற்றது. இது ஆசிரியரிடம் கேட்டுத் தெளியவேண்டிய நூலாதலால் இதனை “சுருதி”யெனவும் கூறுவார். இதனை ரிக், யஜுர்,சாமம், அதர்வணம் என நான்காக வியாசர் வகுத்துள்ளார்.
ரிக் வேதம்:
ரிக் என்பதற்கு துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருள். இறைவனை துதிப்பாடல்கள் பாடி வணங்குவதற்குரிய வழக்குகளை இதில் வகுத்துக்குக் காட்டப்பட்டுள்ளது. இது பத்து மண்டலங்களை கொண்டது. ஒன்று முதல் ஏழு மண்டலங்களில் இறைவனை அக்கினி என்ற பெயராலும், பத்தாவது மண்டலத்தில் பிரம்மன், இந்திரன் தான் என்ற பெயர்களாலும் பாடப்பட்டுள்ளது.
யாஜ் என்னும் பதத்துக்கு யாகம் என்பது பொருள் . யாகம், பலி , தானம் முதலிய கிரியைகளைச் செய்யவேண்டிய முறைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன. அமாவாசை, பௌர்ணமி, காலங்களில் செய்ய வேண்டிய வேள்விகளைப் பற்றியும் , பிதுர்கர்மம் முதலியன செய்ய வேண்டிய விதங்களை பற்றியும் கூறப்பட்டுருக்கிறது. மிகச் சிறப்பு வாய்ந்த ருத்ரம் இதில் அமைந்துள்ளது.
சாம வேதம்:
சாமம் என்னும் இன்னிசையால் பாடப்பெற்றது. இதில் பரமேசுவரனை அக்கினி, இந்திரன் முதலான பெயர்களால் பாடப் பெற்று பெற்றுருக்கிறது. பாவத்தை நீக்கிப் பலனைக் கொடுக்கும் பாடல்கள் இதில் அமைந்திருக்கின்றன.இசையுடன் பாடுவதால் பாவம் நீங்குகிறது.
அதர்வண வேதம்:
இதில் மந்திரம் உச்சரிக்கவேண்டிய முறைகளையும், விரோதிகளின் அழிவின் பொருட்டுச் செய்ய வேண்டிய கிரியா முறைகளைப் பற்றியும் கூறி இருப்பதோடு வேத சாரக்கிரியைகளையும் அனுஷ்டானங்களையும் பற்றிய தோத்திரங்களும் உள்ளன.
உபநிஷதம்:
உபநிஷதம் , நான்கு வேதப்பிரிவுகளிலிருக்கும் சம்ஹிதை, பிராம்மணம் ,ஆரணியகம் என்ற பாகங்களைச் சார்ந்தவை. உபநிஷத் என்பதற்கு குருவின் அருகில் உட்கார்ந்து அறிந்துகொள்ளப்படும் ஞானம் என்று பொருள்கொள்ளுகிறார்கள். நூற்றியெட்டு உபநிஷத்துக்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான உபநிஷத்துக்கள் பத்தாகும்
அவை
ஐத்ரேயே உபநிஷத்,
தைத்திரீய உபநிஷத்,
கடோபநிஷத்,
சுவேதாசுவதர உபநிஷத்,
பிருஹதாரண்யகோபநிஷத்,
பிரச்னோபநிஷத்,
கேனோபநிஷத்,
ஈசோபநிஷத்,
முண்டகோபநிஷத்,
சாந்தோக்கிய உபநிஷத்
இந்த பத்து உபநிஷதங்களுக்கும் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் பாஷ்யம் செய்துள்ளார்கள் . பின்னர் இராமானுஜர், வித்யாரணயர், ஆனந்த தீர்த்தர் முதலானவர்கள் பாஷ்யம் செய்துள்ளார்கள்.