Sunday, October 2, 2022
Home History Temples சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் முறை

சிவன் கோவிலில் வழிபாடு செய்யும் முறை

கோவிலுக்கு அருகில் சென்றவுடன் கைகால்களைக் கழுவி சுத்தம் செய்து  கொண்டு கோபுரத்தின் முன்சென்று இரண்டு கைகளையும் தலைமேற்குவித்து மூல மந்திரத்தை உச்சரித்துக் கொண்டும், தோத்திர பாடல்களை பாடிக்கொண்டும், ( மூல மந்திரம் மற்றும் தோத்திர பாடல்கள் தொகுப்பு தனியாக கொடுத்து உள்ளோம், ) மனதில் வேறு எந்த எண்ணங்களும் (காமம், குரோதம் ஆசை), தோன்றாமல், இறைவனை மட்டும் நினைத்தபடி கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும், கடவுள் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோவிலுக்குள் போக வேண்டும்.

கொடிமரத்தின் பக்கத்தில்  சென்றதும் தலை, செவியிரண்டு, கைகள் இரண்டு, புஜங்களிரண்டு, மோவாய்க் கட்டை ஆகிய எட்டு அவயங்களும் பூமியில் படும்படி வணங்கல் வேண்டும். இப்படி வணங்குவது அஷ்டாங்க வணக்கம். பெண்கள் தலை, கையிரண்டு, முழங்கால் இரண்டு ஆகிய ஐந்து அவயங்களும் பூமியில் படும்படி வணங்குதல் வேண்டும்.இதனை பஞ்சாங்க வணக்கம் என்பர்.

கொடிமரத்தை கண்டதும் இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்தத்தில் நிலைத்திருப்பர் என நினைத்து அதனை சூட்சமலிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பிரகாரங்களை வலம் வர வேண்டும். ஐந்து பிரகாரங்கள் உள்ள இடங்களில் அந்த ஐந்து  பிரகாரங்களையும் பஞ்சகோசங்களாக மதித்து ஒவ்வொரு கோசத்திலும் ஆத்மா  உழன்று தெளிந்து  அதைவிடுத்து மேலே செல்வதாக நினைக்க வேண்டும். ஐந்து பிரகாரங்களையும் கடந்தால் கடவுளது சாமீப்யபதத்தை அடையலாம் என்பதை உணர்தல் வேண்டும். பிரகாரங்களை வலம் வந்து, பலீபீடத்தின்  அருகில் சென்று நம்மிடம் உள்ள காமம், குரோத, ஆசை, மோக, மத, போன்ற எண்ணங்களை பலீ கொடுக்க உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பின் கன்னிமூலையில் உள்ள விநாயகரிடம் சென்று வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடப்புறத்திலும் இடக்கையால் வலப்புறத்திலும் மண்டையில் மூன்று முறை குட்டுகளிட்டு , மூன்று  முறை தோப்புக்கரணமிட்டு, விநாயகர் தோத்திரம் கூறி வணங்கல் வேண்டும்.

தலையின் இரு பக்கங்களிலும் குட்டிக்கொள்ளும் பொழுது உணர்ச்சி அற்ற நரம்புகள் உணர்ச்சி பெறுகின்றன. நமது வாழ்க்கையில் எவ்வித இடையூறுகளும் குறுக்கிட வண்ணம் இருப்பதற்காகவே விக்கினங்களை போக்கியருளும் விநாயகரை முதலில் நாம் வழிபடுகின்றோம் . விநாயகர் முன் தேங்காயை விடலை இடுவர். அது சிதறுவதைப்  போல தனது பாவங்களை அல்லது விக்கினங்கள் சிதற வேண்டும் என்று விடலையிடுவர். பின்னர் துவாரபாலகரிடம் முன் சென்று இறைவனை வணங்குவதற்க்கு  அனுமதி செய்யுமாறு வேண்டிக்கொண்டு சந்நிதியினுள் சென்று. இறைவனை வணங்கி தோத்திரப் பாடல்கள் கூறி வழிபட வேண்டும் . தேங்காய், பழம் முதலிய நிவேதனப் பொருட்கள் கொடுத்து நிவேதிக்கச் செய்யலாம். கற்பூர தரிசனம் செய்து, திருநீறு பெற்றுக்கொண்டு, மூலஸ்தான மூர்த்தியை நெஞ்சுருகி, கண்ணீர் கசிந்துருகித் துதித்து வெளிவரல் வேண்டும். இதனை தொடர்ந்து அம்பிகை சந்நிதியிலும் இவ்வாறே செய்ய வேண்டும்.

உட்பிரகாரங்களில் இருக்கும் ஒவ்வொரு மூர்த்தியையும் வணங்கிக்கொண்டே வலம் வரல் வேண்டும்.தட்சிணாமூர்த்தியிடம் சென்று அவரை குருவாக பாவித்து வணங்கல்  வேண்டும்.

சிவபெருமானது குருவடிவே தட்சிணாமூர்த்தி ஆகும். ஆலயங்களில் கர்பக்கிரத்தின் தென்பாகத்தில் தென்திசை நோக்கிக் வீற்றுருக்கிறார். ஆதலால், இவரைத் “தென்முகக்கடவுள்” எனவும் கூறுவர் .

பின்னர் முருகப்பெருமானை சென்று வணங்கி , சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, சிவத்தியானத்தில் இருக்கும் இவரிடம் சென்று நாம் சிவனின் சொத்தை எதுவும் எடுத்து செல்லவில்லை என்று நமது உள்ளங்கையை தேய்த்து உறுதி செய்து வணங்கி சிவதரிசன பலனை தருமாறு பிரார்த்திக்க வேண்டும். பின்னர் நவகிரகங்களை வணங்க வேண்டும் .

சனீஸ்வரா நான் உன்னை தொழுவேன், என்னை தொடாதே என வேண்டித் தீவினை நம்மை அணுகாதிருக்கவும் நவகிரஹ சனீஸ்வர ஆராதனை கோவில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

இந்தவிதமான ஆலய தரிசனம் உள்ளே முடிந்த பிறகு கொடி மரத்திற்குச் சற்று தூரம் விலகியிருந்து “ஓம் நமசிவாய” என்று நூற்றியெட்டு முறை சொல்லி மூர்த்தியை தியானித்துக்கொண்டு மெளனமாக வீட்டிற்க்கு  வரல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments